பட்டேல் ஞானோதயம். குடி அரசு - கட்டுரை - 24.09.1933 

Rate this item
(0 votes)

தோழர் பட்டேல் அவர்கள் ஒரு பெரிய தியாகி என்றும், தேசபக்தர் என்றும், தேசீயவாதி என்றும் பலர் கருதிக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரைப்பற்றிய நமது அபிப்பிராயமெல்லாம் நமது தென்னாட்டில் தியாகி என்றும், தேச பக்தர் என்றும் தேசியவாதி என்றும், பெயர் வாங்கி இருக்கும் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்களைப் போல், படேல் அவர்கள் ஒரு ஆல் இந்தியா சத்தியமூர்த்தி என்பதேயாகும். 

இந்த கருத்து நாம் அவரை முதல் முதல் எப்போது சந்தித்தோமோ அப்போதே கொண்டதாகும். என்றாலும் தோழர் காந்தியவர்கள் தோழர் படேலின் வசவுக்கும், எதிர்ப்புக்கும். மார்பைக்காட்ட தைரியமில்லாமல் அவரை கைவசப்படுத்தக் கருதி ஒருகாலத்தில் “பட்டேலின் தொடையின் மீது நான் தலைவைத்துப் படுத்துக்கொண்டிருக்கும் போது எனது உயிர் போகுமானால் அதை ஒரு பாக்கியமாகக் கருதுவேன்” என்று சொல்லி தோழர் பட்டேலை தட்டிக்கொடுத்து தப்பி வந்தார். இதன் பயனாக தோழர் பட்டேல் அவர்களும் தீவிர ஒத்துழையாமை காலத்தில் இந்திய சட்டசபைத் தலைவர் பதவிபெற்று "பெரிய தியாகி”யாகி ஏராளமாய் பணம் சம்பாதித்து. உலக விளம்பரம் முதலிய பலன்களைப் பெற்றார். அவர் பார்ப்பனர்களுக்கு தாசராய் இருந்த காரணத்தால், வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்தை எதிர்த்த தால் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரை தோழர் சத்தியமூர்த்தியை விட பெரிய தேசபக்தராகவும், தியாகியாகவும் ஆக்கிவிட்டன. 

மதத்தில் எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் எழுதிவைத்த புஸ்தகங்களுமே பார்ப்பனரல்லாதார்களுக்கு குருவாகவும், வேதமாகவும் இருந்து வந்ததோ அது போல் அரசியலிலும் பார்ப்பனர்களே குருவாகவும், பார்ப்பனப் பத்திரிகைகளே வேதமாகவும் இருந்ததால் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் அப்படியே நம்பிவிட்டார்கள். 

அது எப்படியோ இருக்கட்டும் இப்போது சீர்திருத்தம் ஏற்பட்டு அது அமுலுக்கு அடுத்த வருஷக்கடைசியில் வரக்கூடும் என்று தெரிந்தவுடன், பழயவாடை அடிக்க ஆரம்பித்து புதிய ஞானம் பெற்று இந்திய மக்களுக்கு புதிய ஞானோபதேசம் செய்ய வந்து இருக்கிறார். 

 

"அதாவது இங்கிலாந்து இருதயமற்றதென்பதே எனது அபிப்பிராயம். இந்தியாவினால் இங்கிலாந்து மகோன்னத நிலையடைந்து விட்டது. இங்கிலாந்து இந்தியாவை உதறித்தள்ளி விட முடியாது. இங்கிலாந்துக்கு பலவந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டா லொழிய இந்தியாவைவிட்டு விடாது. 

காந்தியாரின் உபதேசங்களெல்லாம் தவறு, என்று உணர்கிறேன். சமாதானம் செய்துகொள்வதற்கெல்லாம் போதிய காலங்கள் காந்தியாருக்கு அளிக்கப்பட்டு விட்டது. காந்தியாருக்குள்ள அவ்வளவு அதிக அதிகாரங்கள் வேறு எந்த தலைவருக்கும் இந்தியாவில் இல்லை. ஆனால் அவரால் ஏற்பட்ட முடிவான பலன்களெல்லாம் வெறும் பூஜ்யமேயாகும். காந்தியத்தினால் நாங்களெல்லாம் வெற்றியே ஏற்படாதென்கிற துணிந்த முடிவுக்கு வந்து விட்டோம். நாங்கள் ஒரு புதிய வேலைத்திட்ட முறையை ஒரு புதிய தலைவ ரின் கீழ் நடத்த விரும்புகிறோம்.” 

என்கின்ற குறிப்புகளைக்காட்டி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் என்றாலும், இந்த செய்தி எதுவரையில் இருக்கும் என்பதுயாவரும் சந்தேகப்படக்கூடியது தான். ஏனெனில் தோழர் காந்தியாருக்கு ஏதாவது ஒரு விதத்தில் மறுபடியும் செல்வாக்கு வந்துவிடுமானால் "காந்தியின்றிக் கதி மோட்சமில்லை” என்கின்ற பல்லவியைப்பாட ஆரம்பித்துவிடுவார் என்பதில் யாவரும் சந்தேகப்படவேண்டியதில்லை. 

குடி அரசு - கட்டுரை - 24.09.1933

Read 63 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.